சண்டிகர்:
அரியானா மாநில முன்னாள் முதல்-மந்திரி ஓம்பிரகாஷ் சவுதாலா. இவர் அரியானா மாநிலத்தில் 4 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார். மேலும் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். இவருக்கு தற்போது 87 வயதாகிறது.
இவர் ஆசிரியர் தேர்வு முறைகேடு வழக்கில் சிறை தண்டனை பெற்று திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜெயிலில் இருந்தபோது ஓம்பிரகாஷ் சவுதாலா 10ம் வகுப்பு தேர்வு எழுத விருப்பினார். இதற்காக அவர் கடுமையாக படித்தார். 2019ம் ஆண்டு அவர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். ஆனால் அவரால் ஆங்கில தேர்வை எழுத முடியவில்லை.
இந்தநிலையில் அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆங்கில தேர்வை எழுதினார். தேர்வு முடிவுகள் வெளியானதில் ஓம்பிரகாஷ் சவுதாலா ஆங்கிலத்தில் 88 சதவீத மதிப்பெண்களை பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் அவர் 10ம் வகுப்பில் பாஸ் ஆகியுள்ளார்.
தனது 87 வயதில் பள்ளிக்கு சென்று தேர்வு எழுதி அவர் பாஸ் ஆகியுள்ளார்
இந்திய தேசிய லோக்தளம் தலைவர் வீர் சிரோமணி மகரானா பிரதாப்பின் 428வது பிறந்த நாள்விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஓம்பிரகாஷ் சவுதாலா சிறப்பு விருத்தினராக பங்கேற்றார். அப்போது மாநில கல்வித்துறை அதிகாரிகள் மதிப்பெண் பட்டியலை ஓம்பிரகாஷ் சவுதாலாவிடம் ஒப்படைத்தனர்.
ஓம்பிரகாஷ் சவுதாலா தனது 87 வயதில் 10ம் வகுப்பு பரீட்சை எழுதி பாஸ் ஆகி இருப்பதை மையமாக வைத்து ‘தாஸ்வி’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. அபிஷேக் பச்சன், நிம்ரத்கவுர் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் இருவரும் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அபிஷேக் பச்சன் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், வாழ்த்துக்கள் தாஸ்வி என்று கூறியுள்ளார். நிம்ரத்கவுர் தனது டுவிட்டர் பதிவில், நிச்சயமாக அற்புதம், வயது என்பது உண்மையில் இரண்டு இலக்கம் மட்டுமே என்று கூறியுள்ளார்.
87 வயதான சவுதாலா இன்னும் அதிக உற்சாகமாகவே உள்ளார். அவரை சுற்றி இருக்கும் அவரது வயதுடையவர்கள் ஓய்வு காலத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் சவுதாலா இன்னும் அரசியலில் முழுமையாக ஈடுபடுகிறார். கடந்த 2 ஆண்டுகளில் அரியானாவில் அனைத்து மாவட்டகளுக்கும் பல முறை சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.