ஆந்திரக் கடற்பகுதியில் புயல்… கடலோரப் பகுதிகளில் கனமழை… சீற்றத்துடன் எழும் அலைகள்

ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் அசானி புயல் வடக்கு நோக்கியும் அதன்பின் வடகிழக்குத் திசையிலும் நகர்ந்து நாளைக் காலைக்குள் வலுவிழக்கும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. புயலின் எதிரொலியாக ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை ஐந்தரை மணி நிலவரப்படி ஆந்திரத்தின் மசூலிப்பட்டினத்துக்குத் தெற்கு, தென்கிழக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு மத்திய வங்கக் கடலில் அசானி புயல் நிலவியது. இது அடுத்த சில மணி நேரங்களுக்கு வடக்கு நோக்கியும், அதன்பிறகு நரசாபூர், ஏனாம், காக்கிநாடா, துனி, விசாகப்பட்டினம் கடற்கரைக்கு இணையாக வடகிழக்கு நோக்கியும் நகர்ந்து இன்றிரவு வடக்கு ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் எனத் தெரிவித்துள்ளது.

புயல் படிப்படியாக வலுவிழந்து நாளைக் காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால் கடலோர ஆந்திரம், ஒடிசாவின் தென்கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

 

புயலின் காரணமாகக் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் நிலையில் ஆந்திரத்தின் சிறீகாக்குளம் சுன்னாப்பள்ளி கடற்பகுதியில் நேற்று ஒரு சப்பரம் கரை ஒதுங்கியது. இதை அப்பகுதிமக்கள் மீட்டுக் கரைசேர்த்துவிட்டு உளவுத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். வங்கக்கடலோர நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருந்து இது இழுத்துவரப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிது.

 

ஆந்திரக் கடற்பகுதியில் நிலவும் அசனி புயல் காரணமாக விசாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் சூறைக்காற்று வீசுவதால் கடல் அலைகள் சீற்றத்துடன் எழுகின்றன.

 

ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் சீற்றத்துடன் அலைகள் எழும்புவதால் உப்படா கடற்கரைச் சாலை மூடப்பட்டுள்ளது. அந்தச் சாலையில் ஆட்கள், வாகனங்கள் செல்வதைத் தடுக்க 2 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புயலின் எதிரொலியாக விசாகப்பட்டினத்தில் இண்டிகோ நிறுவனத்தின் 22 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இருந்தும் பெங்களூரில் இருந்தும் விசாகப்பட்டினத்துக்குச் செல்லும் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா – விசாகப்பட்டினம் இடையான விமானச் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.