தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதிலும், தலைநகர் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டங்கள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றார்கள். கடந்த 2011-ம் ஆண்டு சென்னை பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தனிநபர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றச் சொல்லி உத்தரவிட்டனர். இந்த உத்தரவையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள 300-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. அடுத்ததாகச் சென்னை பெருமழை, கொரோனா பேரிடர் என்று பல்வேறு காரணங்களினால் மீதமிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெறவில்லை.
இந்த நிலையில்தான், சமீபத்தில் பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கானது தலைமை நீதிபதி அடங்கிய அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கால்வாயை மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், “ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது ஆக்கிரமிப்புகளை ஊக்குவிப்பது போன்று ஆகிவிடும். ஆந்திரா முதல் புதுச்சேரி வரை முக்கிய நீர் வழித்தடமாக இருந்த பக்கிங்ஹாம் கால்வாய் தற்போது ஆக்கிரமிப்பாளர்களால் பாழடைந்து காணப்படுகிறது. இந்தக் கால்வாயை அழகுபடுத்தினால், சென்னை நகரமும் அழகாகும். இதில் பொதுமக்களுக்கும் பங்கு உள்ளது” என்று நீதிபதி கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த உத்தரவுக்கு சில வாரங்களுக்கு முன்பாகவே பொதுப்பணித்துறை அதிகாரிகள், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியை அடுத்துள்ள கோவிந்தசாமி நகர்ப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 259 ஆக்கிரமிப்புகளுக்கு நோட்டீஸ் வழங்கியிருந்தார்கள். நீதிமன்ற உத்தரவை அடுத்து, அந்த பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசு அதிகாரிகள் தொடங்கினர். இதற்கு அங்கு வசிக்கும் மக்கள் சாலைகளில் போராட்டம் நடத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த 300-க்கும் அதிகமான காவலர்கள் வரவழைக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அங்கிருந்த மக்களுக்குத் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியதின் மாற்றுக் குடியிருப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இருந்தபோதிலும், அந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் எதிர்ப்பையும் மீறி, அங்கிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சி அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மேற்கொண்டனர்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தான், கடந்த 8.5.2022 தேதியன்று அந்த பகுதியைச் சேர்ந்த கண்ணையா என்ற 60 வயது முதியவர் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீ குளித்தார். அங்கிருந்தவர்கள் தீயை அணைத்து அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு 40 சதவிகிதம் தீ காயம் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தீ குளித்த சம்பவம் நடந்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் சிலர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரசு அதிகாரிகள் இருவரைத் தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
மேலும், அங்கு ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க நிறுத்தப்பட்டிருந்த வாகனம் உட்பட பல்வேறு வாகனங்கள் மீது கல்வீசி கண்ணாடிகளை உடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. நிலைமையைக் கட்டுப்படுத்த 500-க்கும் அதிகமான காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்தநிலையில் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் கண்ணையா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இனிவரும் காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டிய நிலை ஏற்பட்டால், அந்த பகுதி மக்களுடன் முன்கூட்டியே கலந்தாலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மந்தைவெளி, மயிலாப்பூர் பகுதிகளில் கட்டிவரும் வீடுகளில் ஆர்.ஏ.புரம் பகுதி மக்கள் மறு குடியேற்றம் செய்யப்படுவார்கள். மேலும், ஆர்.ஏ. புரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துத் தீக்குளித்து உயிரிழந்த கண்ணையாவின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்” என்று தெரிவித்தார். ஆர்.ஏ. புரம் ஆக்கிரமிப்பு அகற்றத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையில், மனுதாரர் மற்றும் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனர்.
அதன்பின் பேசிய நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை. இதில் தொடர்புடையவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது மாநில அரசின் வேலை என்பதால், அதை அவர்கள் செய்யட்டும். ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளுக்குத் தடை விதிக்கப்போவதில்லை. இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் பேசியதிலிருந்து அவர் மிகவும் விழிப்புணர்வோடு இருக்கிறார் என்பது தெரியவருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் மாற்று இடங்களுக்கான ஆவணங்களை உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தனர். மேலும், “ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவேண்டும். நீதிபதிகளின் உத்தரவு நீர்த்துப்போவதை நாங்கள் விரும்பவில்லை” என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
“ஆர்.ஏ. புரம் விவகாரத்தைப் பொறுத்தவரைக் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தான், தமிழக அரசு அந்த பகுதியிலிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையைச் செய்தது. அதேபோல, ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உரிய மாற்று இடம் கிடைப்பதையும் இந்த அரசு உறுதிசெய்துள்ளது. அதைத்தான் தற்போது உச்ச நீதிமன்றமும் மீண்டும் ஒருமுறை உறுதிசெய்துள்ளது. நீர்நிலை பகுதிகளை ஆக்கிரமித்துக் குடியிருப்பு கட்டியது எந்தளவுக்குத் தவறோ, அதே அளவுக்கு ஆக்கிரமிப்பு இடங்களுக்கு மின், குடிநீர் இணைப்பு வழங்கி வரி வசூல் செய்ததும் அரசின் தவறு தான்.
அந்த இடத்துக்கு மக்கள் வந்த சமயத்திலேயே அவர்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை, குடும்ப அட்டை என்று அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தது இந்த அரசு இயந்திரம் தான். இப்போது இது ஆக்கிரமிப்பு பகுதி அங்கிருந்து உடனடியாக வெளியேறுங்கள் என்று சொல்வதும் இதே அரசு இயந்திரம் தான். அவர்களின் வாழ்நாள் சேமிப்பு மொத்தத்தையும் செலவுசெய்து வீடு கட்டி, அந்த பகுதியிலேயே இரண்டு தலைமுறையாக வாழ்ந்துவரும் மக்கள் நிலை குறித்தும் அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இனிவரும் காலங்களில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளுக்கு அரசு எந்தவகையிலும் துணை போகாது என்பதையும் இந்த அரசு தான் உறுதிசெய்யவேண்டும்” என்பதுவே சமூக ஆர்வலர்கள் பலரின் கருத்தாக உள்ளது.