சென்னை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தென் பிராந்திய ஏற்றுமதியாளர் விருது விழாவில் கலந்து கொண்டு பேசியதாவது:
இந்திய அளவில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அமைப்பில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியும்போது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த 2020-21ம் ஆண்டில், இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் ரூ.1 லட்சத்து 93 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்து 8.97 விழுக்காடு பங்களிப்புடன் இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்த விழுக்காடு என்பது ஆண்டுதோறும் அதிகமாக வேண்டும்; தமிழ்நாடு முதன்மையான மாநிலமாக ஆக வேண்டும் என்பதுதான் இந்த அரசினுடைய விருப்பம், என்னுடைய லட்சியம்.
மோட்டார் வாகனம் மற்றும் பாகங்கள், ஆடை மற்றும் அணிகலன்கள், காலணிகள், கொதிகலன்கள், ரப்பர் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது. இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.
தொழிலை மேம்படுத்துகிறது. மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது. தொழில் அதிபர்களுக்குள் போட்டித் தன்மையை உருவாக்குகிறது. தொழில்கள் இடையே செயல்திறனை அதிகரிக்கிறது.
அதனால் தான் 2030 ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக, மாநிலப் பொருளாதாரம் மாற வேண்டும் என்று நான் பெரிதும் நம்புகிறேன். இந்த இலக்கை அடைய வேண்டும் என்றால் ஏற்றுமதி வர்த்தகமும் அதிகமாக வேண்டும்.
தமிழ்நாட்டின் தற்போதைய ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். அதில் இருந்து இருந்து 2030ம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த வேண்டும்.
இதனை அடைவதற்கான புதிய உத்தியை கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி நான் வெளியிட்டேன். இதற்காக, பல்வேறு முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் இப்போது இருக்கும் திறனையும் வளத்தையும் வைத்துப் பார்க்கும்போது, ஏற்றுமதியில் நாம் இன்னும் பல மடங்கு உயர முடியும். இதனை அரசும், பியோ அமைப்பும் இணைந்து நிச்சயம் நிறைவேற்ற முடியும்.
ஏற்றுமதி சார்ந்த ஒன்றிய அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டைச் சார்ந்த நிறுவனங்களுக்கு முழுமையாக சென்றடைய ஃபியோ அமைப்பு மாநில அரசுடன் இணைந்து பங்காற்ற வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த ஏற்றுமதிக்கான பொருள்களை ஆங்காங்கே உற்பத்தி செய்தாலும் அவற்றை ஒன்று திரட்டுவதிலும், அப்பொருள்களின் தரத்தினை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதிலும் இருக்கக்கூடிய இடர்பாடுகளை களையும் விதமாக, தனியார் பங்களிப்புடன் ஒரு ஏற்றுமதி கொள்முதல் அமைப்பை உருவாக்க பியோ அமைப்பு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக, ஓ.டி.ஓ.பி என்கின்ற ஒரு மாவட்டத்திற்கு ஒரு பொருள் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்திட துணைபுரிய வேண்டும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் சிறப்பாக செயல்படும் ஏற்றுமதியாளர்கள் அங்கீகரிக்கப்படுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களின் வெற்றிக்காக நான் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இதையும் படியுங்கள்… மறு ஆய்வு பணிகள் முடியும்வரை தேசத்துரோக வழக்கு பதிவு செய்யக்கூடாது- உச்ச நீதிமன்றம் அதிரடி