டெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவது குறித்து 3 மாதத்திற்குள் தெளிவான முடிவு எடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மத்திய அரசு. ‘பிரிவு 29 & 30ஐ உபயோகித்து, அந்தந்த மாநிலங்கள் (மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள்) இந்துக்களை மைனாரிட்டிகளாக அறிவிக்கலாம்’ என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், மையம் அதன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றுவதை ஏற்க மறுத்ததுடன், 3 மாதங்களில் இது தொடர்பான செயல்முறை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர், ‘‘ஜம்மு-காஷ்மீர், லடாக், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் மாநிலங்களில் மற்ற மதத்தினரைவிட இந்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும்’’ என்று வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல், எம்.எம். சுந்தரேஷ் அமர்வு விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த பலகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 25-ம் தேதி (2022) மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை சார்பில் உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘இந்துக்களின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதே வழக்கில், மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மே மாதம் 9ந்தேதி மேலும் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘‘சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் மத்தியஅரசு மாறி மாறி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்றைய விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மத்தியஅரசு இந்துக்கள் சிறுபான்மையினராக அறிவிப்பதில், முரண்பாடான பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளது. முன்பு ஒரு நிலைபாட்டை அறிவித்துவிட்டு, தற்போது வேறு ஒரு நிலைப்பாட்டி அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மத்தியஅரசு இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு, அடுத்த 3 மாதங்களில் தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.