கொழும்பு:
பொருளாதார சீரழிவால் கொலை வெறியுடன் இருக்கும் இலங்கை மக்களிடம் இருந்து தப்பிக்க மகிந்த ராஜபக்சே தப்பிஓடி தலைமறைவாகி இருக்கிறார். கடந்த 20 ஆண்டு காலமாக இலங்கையில் ராஜபோக வாழ்க்கை நடத்திவந்த அவர், இன்று கண்காணாத இடத்துக்கு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
ராணுவத்தின் உதவியால் கொழும்பில் இருந்து தப்பிய அவர் தீவு ஒன்றில் தஞ்சம் அடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவர் இந்தியாவுக்கு தப்பி சென்று விட்டதாக நேற்று இரவு இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் உள்ள தொலைக்காட்சிகளிலும் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் இந்தியாவில் பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது. சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் பரவியது.
ஆனால் இதை இந்தியா மறுத்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள தூதரக மேலதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இலங்கையில் இருந்து சில அரசியல்வாதிகளும் அவர்கள் குடும்பத்தினரும் இந்தியாவுக்கு சென்று இருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும் சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவி உள்ளன. அந்த செய்தி போலியானது. அப்பட்டமான பொய்யானது. அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசின் நடவடிக்கைகளை இந்தியா ஆதரிக்கிறது. இந்தியாவின் கொள்கை நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து உதவும்.
இந்தியாவில் இருந்து ராணுவம் கொழும்புக்கு வருவதாகவும் தவறான தகவல் பரவியுள்ளது, அதுவும் வதந்திதான். இலங்கையில் ஜனநாயகம், பொருளாதாரம் தழைக்க இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.