கொழும்பு:
கடும் பொருளாதார நெருக்கடியால் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கு இடையே நேற்று ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது.
இதையடுத்து மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.பேருந்துகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் நடைபெற்றன.
போராட்டக்காரர்கள் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே தஞ்சம் அடைந்துள்ள கடற்படை தளத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பொது சொத்துக்கள் மற்றும் தனி நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த இலங்கை முப்படைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ ஊடக பிரிவு தகவல்கள் தெரிவித்தன. இதற்கு, அரசுக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு அதிபர் கோத்தபய மற்றும் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்நிலையில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி தரவில்லை என இலங்கை ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூடு இல்லாமலேயே சேதம் ஏற்படுத்தும் போராட்டக்காரர்கள்ளை கலைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. மேலும் இலங்கை அரசு சட்ட ஒழுங்கை காக்க தவறிவிட்டதாகவும் அந்நாட்டின் மனித உரிமை ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.