இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒரு கட்டத்தில், போராட்டம் வன்முறையாக மாற, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, குடும்பத்துடன் தலைமறைவானார்.
இந்நிலையில், ராஜபக்ச குடும்பத்துடன் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக சில சமூக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளும் அவர்களின் குடும்பங்களும் இந்தியாவுக்கு சென்றிருப்பதாக ஊடகங்கள் சிலவற்றிலும், சமூக ஊடகங்களிலும் வதந்திகள் பரவுவதனை உயர் ஸ்தானிகராலயம் அவதானித்துள்ளது
இவை போலியானதும் அப்பட்டமான பொய்யானதுமான அறிக்கைகளாக உள்ளதுடன் எந்தவிதமான உண்மைகளோ அல்லது அர்த்தங்களோ இல்லாதவை. இவ்வாறான செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கின்றது” என குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், எந்த நபரையும் சட்டவிரோதமாக அழைத்து செல்லவில்லை என இலங்கையின் சிவில் விமானப் போக்குவரத்து துறை அதிகாரி தெமியா அபிவிக்ரம தெரிவித்துள்ளார்