இலங்கையில் வன்முறை தொடர்வதால் தமிழகத்திற்குள் தேச விரோத சக்திகள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்டை நாடான இலங்கையில், ஆளும் அரசுக்கு எதிராக கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதால், அந்நாட்டில், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களில் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இவற்றுக்கு எல்லாம் காரணம், அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் எனக் கூறி, பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் பொது மக்கள் நடத்திய போராட்டத்திற்கு எதிராக, ராஜபக்சே ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் ராஜபக்சே ஆதரவாளர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி அவர்களை ஓட ஓட விரட்டினர். மேலும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதற்கிடையே பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்து, அரசு அலுவலகத்தில் இருந்து வெளியேறி, திரிகோணமலையில் தலைமறைவாகி உள்ளார். தற்போது இலங்கை முழுவதும் வன்முறைக்களமாக காட்சி அளிக்கிறது.
இந்நிலையில், தேச விரோத சக்திகள் ஊடுருவலை தடுக்க கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை பலப்படுத்த தமிழக காவல் துறை , பாதுகாப்பு குழுமத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்; இலங்கையில் இருந்து தப்பிய 58 கைதிகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு உள்ளது; விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், போதைப் பொருள் கும்பல் கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய வாய்ப்பு உள்ளது; இதனால் இலங்கையில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.