`ராஜபக்சே அரசு ஆட்சியிலிருந்து பதவி விலக வேண்டும்’ என்று கடந்த ஒரு மாத காலமாகவே இலங்கையின் கால் ஃபேஸ் என்ற இடத்தில் போராட்டம் நடந்துவந்தது. அமைதியாக நடந்துவந்த இந்த மக்கள் போராட்டம், வன்முறையாக மாறியது. மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரின் ஆதரவாளர் போராட்டக்காரர்களைத் தாக்கினர். இதனால் போராட்டக் களம், வன்முறைக் காடாக மாறியிருக்கிறது. கால் ஃபேஸைத் தாண்டி இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இலங்கையில் என்ன நடக்கிறது… மகிந்த நாட்டைவிட்டுத் தப்பியோட நினைப்பது ஏன்?
எல்லை மீறிய மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள்!
“அதிபர், பிரதமர் என இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, நாட்டை விட்டு வெளியேற வெண்டும். வெளிநாடுகளிலிருக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளோடு இலங்கையின் பழைய நாடாளுமன்றம் அமைந்திருக்கும் கால் ஃபேஸ் பகுதியில் அமைதியாகப் போராடிவந்தனர் இலங்கை மக்கள். இந்த நிலையில், தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக மே 9-ம் தேதி அன்று அறிவித்தார் மகிந்த. அதிபர் கோத்தபய ராஜபக்சே கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் மகிந்த இந்த முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்புவதற்கு முன்பாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருக்கும் தனது ஆதரவாளர்களைக் கொழும்புக்கு அழைத்து, விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் மகிந்த. ஆதரவாளர்கள் பலரும், `நீங்கள் ஏன் பதவி விலக வேண்டும்? கோத்தபயவை பதவி விலகச் சொல்லுங்கள்’ என்று கொந்தளித்திருக்கின்றனர். ஆனால், மகிந்தவோ பதவி விலகுவதில் உறுதியாக இருந்திருக்கிறார்.
மேலும், தான் பதவி விலகினால் இலங்கையின் நிலை என்னவாகும் என்பதைக் காட்டவே மகிந்த, தனது ஆதரவாளர்கள் மூலம் நாடு முழுவதும் கலவரங்களை மூட்டிவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. கால் ஃபேஸ் போராட்டக் களத்துக்கு வந்த மகிந்தவின் ஆதரவாளர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்களைச் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். கால் ஃபேஸ் மட்டுமல்லாது இலங்கையின் மற்ற சில பகுதிகளில் நடந்த போராட்டங்களிலும் கலவரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் மகிந்தவின் ஆதரவாளர்கள். கால் ஃபேஸில் கட்டைகளைக் கொண்டு பொதுமக்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். சிலரை உயிர்போகும் அளவுக்கு அடித்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.
இந்தக் கலவரம், போராட்டத்தைக் கலைக்கும் நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருப்பதாகச் செய்திகள் சொல்லப்படுகின்றன. போராட்டக்காரர்களைத் தாக்குவதற்காகவே சிறையிலிருந்து சில கைதிகள் களமிறக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் கூறப்படுகின்றன. ராணுவம், காவல்துறையின் உதவியோடுதான் இந்தக் கலவரங்கள் நடந்திருப்பதாகத் தெரிகிறது.
பற்றி எரியும் இலங்கை!
ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் எல்லை மீறியதை அடுத்து, போராட்டம் நடத்தி வந்த பொதுமக்கள் ஆளுங்கட்சி எம்.பி-க்கள், முன்னாள் அமைச்சர்களின் வீடுகள், சொத்துகளுக்கு தீ வைக்கத் தொடங்கினர். ராஜபக்சே குடும்பத்தின் பூர்வீக வீட்டுக்கும் தீ வைக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகின. மால்வனை பகுதியிலுள்ள மகிந்தவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்சே வீட்டிலும் தீ வைக்கப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரசுக்கு ஆதரவாக இருந்துவரும் அரசு அதிகாரிகள் சிலரின் வீடுகளும் தீக்கிரையாகியிருக்கின்றன.
தப்பி ஓட முயலும் மகிந்த?
மகிந்தவின் ஆதரவாளர்கள் பொதுமக்களைத் தாக்கியதால் உச்சக்கட்ட கோபத்திலிருக்கிறார்கள் இலங்கை மக்கள். குறிப்பாக இளைஞர்கள் ராஜபக்சேக்களுக்கு எதிராகக் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். மகிந்தவே எதிர்பார்க்காத அளவுக்கு வன்முறைகள் வெடித்திருக்கின்றன. இந்த நிலையில், தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்து வெளிநாட்டுக்குத் தப்பியோட மகிந்த திட்டமிட்டிருப்பதாக அங்கிருந்துவரும் செய்திகள் சொல்கின்றன. `குடும்பத்தோடு எப்படியாவது நாட்டைவிட்டுத் தப்பிவிட வேண்டும்’ என்பதுதான் மகிந்தவின் திட்டம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
இது பற்றி இலங்கையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். “ஏற்கெனவே, நாட்டை நாசமாக்கிவிட்டனர் என்று ராஜபக்சே குடும்பத்தின்மீது இலங்கை மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். `அவர்கள் பதவி விலக வேண்டும்; நாடு கடத்தப்பட வேண்டும் அல்லது சிறையிலடைக்கப்பட வேண்டும்’ என்பதுதான் போராடிவந்த மக்களின் கோரிக்கையாக இருந்தது. அவர்களைத் தூக்கிலிட வேண்டும் என்றோ… கொலை செய்ய வேண்டுமென்றோ இங்கு யாரும் நினைக்கவில்லை. ஆனால், மகிந்த தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டு மக்கள்மீது கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கிறார். இந்த வன்முறையில் சுமார் 10 பேர் வரை உயிரிழந்திருக்கிறார்கள். 150-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இலங்கை அரசும், மகிந்த ராஜபக்சேவும் அமைதியாகப் போராடிவந்த மக்களைச் சீண்டிவிட்டனர். இதன் விளைவுகளை நிச்சயம் அவர்கள் சந்திப்பார்கள்” என்கிறார்கள்.
மகிந்த, கோத்தபய என இருவர் மீதுமே இலங்கை மக்கள் உச்சக்கட்ட கோபத்திலிருக்கிறார்கள். நிலைமை கைமீறிப் போய்விட்டதால், இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கணிக்க முடியாத சூழலே நிலவுகிறது. கலவரம் எப்போது முடிவுக்கு வரும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது!