சென்னை:
அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடப்படும். 13வது ஒப்பந்தம் 2020ல் நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து 14வது ஒப்பந்தம் போடப்பட்டு இருக்க வேண்டும்.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.1000 அ.தி.மு.க. அரசு வழங்கியது. அதனையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. அரசு வந்தது.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் 2 முறை அப்போது போக்குவரத்து அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிற்சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. 30 சதவீதம் ஊதிய உயர்வு, அலவன்ஸ், ஓய்வூதியதாரர்களுக்கான நிலுவை தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் நாளை தொழிற்சங்க பிரதி நிதிகளுடன் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்துகிறார். சென்னை குரோம்பேட்டையில் காலை 10.30 மணிக்கு பேச்சு வார்த்தை தொடங்குகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்க 66 தொழிற் சங்கங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தொ.மு.ச., அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி, பாட்டாளி, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க. உள்ளிட்ட சங்கங்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சங்கத்தில் இருந்து 2 பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து துறை செயலாளர் கோபால், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம், விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கையினை எவ்வகையில் பரிசீலிக்கலாம், அதற்கான சாத்திய கூறுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வு, பராமரிப்பு செலவு போன்றவற்றால் அதிக இழப்பை சந்தித்து வரும் போக்குவரத்து கழகங்கள் சம்பள உயர்வு, அலவன்ஸ் நிலுவை தொகை வழங்குவதற்கு தேவையான நிதியை மாநில அரசிடம் இருந்துதான் பெற வேண்டிய நிலை உள்ளது.
ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் பட்சத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.