கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் அருகே மூடப்பட்டு கிடந்த எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் கொள்ளையடிக்க வந்த கும்பல், போலீசாரை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
தானே புயலில் சேதமடைந்த இந்த தொழிற்சாலையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான டேங்கர்கள், இரும்பு பொருட்கள் இருக்கும் நிலையில், அவ்வப்போது சுற்றுவட்டார கிராம மக்கள் தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து அவற்றை திருடிச் செல்வதாக கூறப்படுகிறது.
நேற்றிரவு அங்கு வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் சுற்றுச்சுவர் மீது தீவைத்து காவலாளிகளின் திசையை திருப்பி உள்ளே செல்ல முயன்றிருக்கின்றனர்.
அந்த நேரம் பார்த்து வந்து ரோந்து போலீசார் எச்சரிக்கை ஒலி எழுப்பிய நிலையில், போலீசாரிடம் சிக்காமல் இருக்க அவர்களை நோக்கி அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.