லக்னோ: ஒப்புக் கொண்ட நடன நிகழ்ச்சிக்கு வராததால் மோசடி வழக்கில் சிக்கிய நடிகை சப்னா சவுத்ரி, கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் உத்தரபிரதேச கோர்ட்டில் ஆஜரானார். கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஆஷியானா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஸ்மிருதி உப்வானில் ‘தாண்டியா நைட்ஸ் வித் சப்னா சவுத்ரி’யின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ரூ.2,500 மதிப்புள்ள டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். ஆனால் நடிகையும், பாடகியும், மாடல் அழகியுமான சப்னா சவுத்ரி, அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சப்னா சவுத்ரி மீது மோசடி புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து சப்னா சவுத்ரி உள்ளிட்ட 6 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. லக்னோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குறிப்பிட்ட தேதியில் ஆஜராகாததால் சப்னா சவுத்ரிக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சப்னா சவுத்ரி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முகமூடி அணிந்த நிலையில் சப்னா சவுத்ரி நீதிமன்றத்தில் ஆஜரானார். அதையடுத்து நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் திரும்பப் பெறப்பட்டது. அடுத்த விசாரணையின் போது நேரில் ஆஜராக சப்னா சவுத்ரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.