நாய் மனிதர்களை விட மிகவும் அதிகமான வாசனை உணர்வைக் கொண்டது. எனவே எல்லா நாடுகளிலும் வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருள்கள் போன்றவற்றைக் கண்டுபிடிக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் உக்ரைன் பாதுகாப்புப் படையில் இருக்கும் பேட்ரோன் (Patron) எனும் நாய் உக்ரைன் போர் சூழலில் பல வெடிப்பொருள்களைக் கண்டுபிடித்து பல மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ல் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் சூழலில் உக்ரைனின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பேட்ரோன் (Patron) என்னும் நாய் உக்ரைன் எல்லைப் பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட வெடிமருந்துகளையும் கண்ணிவெடிகளையும் கண்டுபிடித்து பல உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. மேலும் உக்ரைன் பகுதியிலிருந்து ரஷ்யா பின்வாங்கியபோது அப்பகுதிக்குச் சென்று ஏராளமான வெடிப்பொருள்களைக் கண்டுபிடித்து உக்ரைன் மக்களைக் காப்பாற்ற உதவிசெய்துள்ளது.
இவ்வாறு தன் உயிரைப் பணயம் வைத்து ஒரு போர் வீரனைப் போல் மக்களின் உயிரைக் காப்பாற்றிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் பேட்ரோனைப் பெருமைப்படுத்தும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பதக்கங்கள் வழங்கி மரியாதை செய்தார். இந்த நிகழ்வில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கலந்துகொண்டு பேட்ரோனின் சாகசங்களைப் பார்த்து பாராட்டினார்.
இது தொடர்பானப் புகைப்படங்களையும் காணொலிகளையும் பகிர்ந்த உக்ரைனின் தகவல் தொடர்பு மையம், “ஒரு நாள் பேட்ரோனின் கதை திரைப்படமாக எடுக்கப்படும். ஆனால் இப்போதைக்கு அவர் தனது கடமைகளை உண்மையுடன் செய்து கொண்டிருக்கிறார்” என்று பதிவிட்டுள்ளது.