கடலூர்: கடலூர் அருகே புதுக்குப்பத்தில் உள்ள நாகார்ஜூனா தனியார் ஆலையில் இரும்பு திருட சென்ற கும்பல் ரோந்து போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசியது. ஆனால் யாருக்கும் எந்த காயம் இல்லாமல் அதிஷ்டவசமாக தப்பினர். இது குறித்து புதுச்சத்திரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் அடுத்துள்ள பெரியக்குப்பத்தில் நாகார்ஜூனா தனியார் எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்த ஆலையை சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இரவு நேரத்தில் ஆலையில் இரும்பு பொருள்களை திருடி லாரி, மினி லாரி போன்றவற்றில் எடுத்து சென்று விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது குறித்து ஆலை நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீஸார் இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டர் மீது திருட்டு வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் ஆலை பகுதியில் புதுச்சத்திரம் போலீஸார் 2 பேர் ரோந்துப்பணியில் இருந்துள்ளனர். அப்போது இன்று(மே.11) அதிகாலை 3 மணி அளவில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் ஒரு லாரியுடன் இரும்பு திருட வந்துள்ளனர். போலீஸாரை பார்த்ததும் அவர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து 6 பாட்டிலில் திரி போட்டு வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளில் திரியை பற்ற வைத்து அவர்களை நோக்கி வீசி விட்டு ஓடிவிட்டனர். இதில் 4 பெட்ரோல் குண்டுகள் வெடித்துள்ளது. 2 பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. போலீஸார் நீண்ட தொலைவில் இருந்ததால் அதிருஷ்டவசமாக தப்பினர்.
இது குறித்த தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் தலைமையில் புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா மற்றும் போலீஸார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸார் மற்றும் ஆலையின் காவலர்களை விரட்டவே இந்த பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.