வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதற்கு, அம்மாநில பிரபல எழுத்தாளரும், நாட்டுப்புற கலாசாரம் குறித்து ஆராய்ச்சி செய்பவருமான ரத்னா ரஷீத் பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், தனக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி தரப்போவதாக அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இலக்கிய துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களுக்கு பஷ்சிம்பங்க வங்காள அகாடமி, விருது வழங்கி கவுரவித்து வருகிறது. இதன் தலைவராக, மே.வங்க கல்வித்துறை அமைச்சர் பிரத்யா பாசு உள்ளார். இதனிடையே, முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய 900 கவிதைகளின் தொகுப்பான ‘கபிதா பென்’ என்ற புத்தகத்தை பாராட்டி, சிறப்பு இலக்கிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விருது, இந்த ஆண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ரபிந்திரநாத் தாகூரின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த விழாவில் முதல்வருக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விருதை மம்தா சார்பில், அமைச்சர் பிரத்யா பாசு பெற்று கொண்டார்.
இந்நிலையில், மம்தாவுக்கு விருது வழங்குவதற்கு ரத்னா ரஷீத் பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து பிரத்யா பாசுவுக்கு எழுதிய கடிதத்தில் ரத்னா ரஷீத் கூறியுள்ளதாவது: ரவிந்தரநாத் தாகூர் பிறந்த நாளில், மம்தாவுக்கு விருது வழங்கப்பட்டதன் மூலம், எனக்கு முன்னர் வழங்கப்பட்ட விருது முள்கிரீடமாக வழங்கி உள்ளது எனக்கூறியுள்ளார். இவருக்கு, கடந்த 2019ம் ஆண்டு, வங்காள அகாடமி சார்பில், ஆன்னட சங்கர் சமர்க் சமமான் விருது வழங்கப்பட்டது. இவர் 30க்கு மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார்.
இது தொடர்பாக ரத்னா ரஷீத் அளித்த பேட்டி: எனக்கு வழங்கப்பட்ட விருதை உடனடியாக திரும்ப கொடுப்பது என்ற முடிவை கடிதத்தில் தெரிவித்துள்ளேன். மம்தாவுக்கு இலக்கியத்திற்கான விருது வழங்கப்பட்டது, எழுத்தாளர் என்ற முறையில் அவமானமாக உள்ளது. இது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். மம்தா குறித்த அகாடமியின் புகழுரை, உண்மைக்கு புறம்பானது. அரசியல் களத்தில் மம்தாவின் போராட்டம் பெருமையாக உள்ளது. அவரை மரியாதை செய்கிறோம். மாநிலத்தை தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்ய மக்கள் அனுமதி வழங்கி உள்ளனர். நாங்கள் அவருக்கு தான் ஓட்டு போட்டோம். ஆனால், அரசியலுக்கு செய்த பங்களிப்பையும், இலக்கியத்திற்கு செய்த பணியையும் ஒப்பிடக்கூடாது. இந்த விருதை மம்தா ஏற்றிருக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement