கதைதான் பின்னணி இசையை தீர்மானிக்கிறது: சாம் சி.எஸ்

விக்ரம் வேதா, அடங்க மறு, அயோக்யா, கைதி உள்ளிட்ட படங்களில் பின்னணி இசைக்காக பேசப்பட்டவர் சாம் சி.எஸ். சமீபத்தில் வெளியான சாணிக் காயிதம் படம் பற்றி வெவ்வேறு விதமான விமர்சனங்கள் இருந்தாலும் படத்தின் பின்னணி இசை குறித்து அனைவரும் ஆச்சர்யத்தை வெளியிட்டு வருகிறார். சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சாணிக் காயிதத்திற்கு பின்னணி இசை அமைத்தது பற்றி சாம்.சி.எஸ் கூறியதாவது: இயக்குனர் அருண் மாதேஸ்வரன் படத்தின் கதையை முதன் முறையாக விவரிக்கும் போதே பின்னணி இசை குறித்த குறிப்புகள் என் மனதில் தோன்றிவிட்டது. கதாபாத்திரங்கள், கள சூழல்கள், வசனங்கள், கதை நகரும் போக்கு, இசை முழுவதுமாக மவுனிக்கப்பட வேண்டிய நிமிடங்கள், பின்னணி இசைக்கு முக்கியத்துவம் உள்ள தருணங்கள் ஆகியவற்றை துல்லியமாக அவதானித்த பிறகு, என்னுடைய இசைக் கோர்வையை தொடங்கினேன்.

பொதுவாக நான் இயக்குநர்களின் வேண்டுகோள் அல்லது படக்குழுவினரின் இசை சார்ந்த கோரிக்கை ஏதேனும் இருந்தால் அவற்றையும் செவிமடுத்து பின்னணி இசையை தொடர்வேன். வித்தியாசமான ஒலி குறிப்புகள் மூலம் கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கவும் முயற்சிக்கிறேன்.

கதை, திரைக்கதை, அதனுடைய பின்னணி இசையை எப்படி அமைய வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எந்த பாணியிலான சினிமா என்பதையும் அவதானித்து பின்னணி இசையை வழங்குகிறேன். ரசிகர்களின் ரசனையையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் கடந்து ஒரு ஒலியை வழங்கும் போது, அவர்களின் மகிழ்ச்சியை கரவொலியாக உணர்கிறேன்.

பின்னணி இசைக்காக எடுக்கும் முயற்சிகளைப் போல், படத்தில் இடம்பெறும் பாடல்களுக்காகவும் பிரத்யேக தேடல் இருக்கும். பாடல்களை கதைகளமும், கதாப்பாத்திரமும், அதன் திரைக்கதையும் தான் தீர்மானிக்கிறது. மாண்டேஜஸ் பாடல்கள் என்றாலும், அதிலும் ஒரு இசை சார்ந்த அனுபவம் பார்வையாளர்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற பெருவிருப்பத்துடன் பணியாற்றுகிறேன்.

இசை ரசிகர்களின் காதுகளில் ஒலி சப்தமாக சென்றடையாமல் நாதலயத்துடன் இனிய ஒலியாக சேர வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். மெட்டமைத்த பிறகு பாடல்கள் உருவாவதும், பாடல்கள் எழுதப்பட்ட பிறகு மெட்டுகள் உருவாதும் இயல்பு தான் என்றாலும், வெற்றிக்கரமான பாடல்கள் அமையவேண்டும் என்பது தான் இறுதி இலக்கு. என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.