உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் தோன்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து வருகிற ஜூன் மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப்படத்தின் டீசர் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள படத்தின் முதல் பாடலான பத்தல பத்தல பாடல் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் ‘விக்ரம்’ படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று கசிந்து வருகிறது. அதன்படி ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யா, கிளைமாக்சில் சிறப்பு தோற்றத்தில் (Cameo) நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள ‘விக்ரம்’ பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் சூர்யாவும் கலந்து கொள்வார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து கமல் நடிப்பில் ‘விக்ரம்’ படம் வெளியாகவுள்ளதாலும், இதில் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்படும் தகவல்களால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.