“காத்திருந்து தபால் படிப்பேன்; இப்போ அதுல நானும்..!" – `தபால் தலை' பெருமிதம் குறித்து பி.சுசீலா

`சுகமான குரல் யார் என்றால்?’ பி.சுசீலாவின் குரலே போட்டியின்றித் தேர்வாகும். கிளாஸிக் காலகட்ட திரை ரசிகர்களின் செவிகளையும் மனதையும் வருடிய இவரின் பாடல்கள், இன்றும் அதே இனிமையுடன் ஒலிக்கின்றன. திரையிசை ஆளுமையாகப் பல பெருமைகளைப் பெற்ற சுசீலாவுக்கு, மற்றுமொரு புகழைச் சேர்த்திருக்கிறது இந்தியத் தபால்துறை.

பி.சுசீலா

கலைத்துறைச் சேவைக்காக, சுசீலாவின் உருவம் பொறித்த தபால் தலையுடன் கூடிய சிறப்பு போஸ்டல் கவரை வெளியிட்டிருக்கிறது அஞ்சல் துறை. இதுகுறித்து சுசீலாவிடம் பேசினோம்.

“என் பால்ய காலத்துல போன் வசதியெல்லாம் ரொம்பவே குறைவாதான் இருந்துச்சு. அவசரமா யார்கிட்டயாச்சும் பேசணும்னா, தபால் ஆபீஸுக்குப் போய்தான் பேச முடியும். தபால் மூலமாதான் தகவல் பரிமாற்றம் செய்வோம். இதேபோல, ஆல் இந்தியா ரேடியோவுல ஒலிபரப்பாகிற செய்திகளைக் கேட்க ஆவலுடன் காத்துக்கிட்டிருந்த காலமெல்லாம் பசுமையானது. உலக நிகழ்வுகளைத் தெரிஞ்சுக்க உதவிய இந்த ரெண்டு துறைகளும் எங்க வாழ்க்கையில ரொம்பவே முக்கியமானவை.

நான் பரபரப்பா வேலை செய்துகிட்டிருந்த அந்தக் காலத்துல, ரசிகர்கள்கிட்டேருந்து எனக்கு நிறைய தபால்கள் வரும். அதையெல்லாம் ஆர்வமா படிச்சுப் பார்த்து, பதில் கடிதம் அனுப்புறதுல கிடைக்கிற மகிழ்ச்சி இருக்கே, வார்த்தைகள்ல விவரிக்க முடியாத பரவசம் அது. இன்னைக்கு என் பெயரும் உருவமும் தபால்ல இடம் பிடிச்சிருக்கிறது அளவுகடந்த பெருமிதமா இருக்கு” என்று உவகை கொள்கிற சுசீலா, 30,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தபால் தலையில் பி.சுசீலாவின் உருவம்….

“எத்தனையோ விருதுகள் பெருமிதங்கள் கிடைச்சாலும், அரசாங்கத்திடமிருந்து கிடைக்கிற கெளரவம் எல்லோருக்குமே கூடுதலான மகிழ்ச்சியைத் தரும். அந்த வகையில தபால் துறை என்னைக் கெளரவப்படுத்தியதுல ரொம்பவே சந்தோஷப்படுறேன். நான் எதிர்பார்க்காத பெருமிதம் இது. பெற்றோரின் ஆசீர்வாதம்தான் என் வளர்ச்சிக்கு காரணம்னு நினைக்கிறேன். காலம் கடந்தும் ரசிகர்களின் மனசுல எனக்கு இடம் கிடைச்சிருக்கிறதைப் பெரிய பாக்கியமா நினைக்கிறேன்” என்று உளமகிழ்ச்சியுடன் முடித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.