கார்கிவ்:
ரஷியா- உக்ரைன் போர் கடந்த 77-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் பல முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றி தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை ரஷியா கைப்பற்றியதாக அறிவித்தது. அதன் உருக்கு ஆலையை கைப்பற்றுவதற்கு ரஷியா தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதேபோல உக்ரைனின் கார்கிவ் நகரத்தின் பல முக்கிய பகுதிகளை ரஷியா கைப்பற்றி இருந்தது. போரின் தொடக்கத்திலேயே கார்கிவ் ரஷியாவின் பிடியில் சிக்கியது.
இந்நிலையில் தற்போது உக்ரைனுக்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன. இதனால் போரில் உக்ரைன் பல இடங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன்படி ரஷ்யா ஆக்கிரமித்த கார்கிவ் நகரத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் உள்ள பல கிராமங்களை உக்ரைன் படைகள் மீண்டும் கைப்பற்றியதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பாளர் டெட்டியானா அபட்செங்கோ தெரிவித்துள்ளார். மேலும் பல இடங்களில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவதாகவும் கூறினார்.
கார்கிவ் உக்ரைனின் 2வது பெரிய நகரம் என்பதால், அதன் பகுதி உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பது, ரஷிய படைகள் முன்னேற்றத்தை தடுக்கும் என்றும், போரின் போக்கையே மாற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.