கோவை மாநகராட்சி நிர்வாகம், கவுண்டம்பாளையத்தில், ரூ.14.5 கோடி மதிப்பீட்டில், 2 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கோவை மாநகராட்சியின் சூரிய மின் உற்பத்தி 5.6 மெகா வாட்டில் இருந்து 7.6 மெகாவாட்டாக உயர்கிறது.
கோவையில் கவுண்டம்பாளையத்தில் 4வது சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான முன்மொழிவை கோவை மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாக ஆணையருக்கு அனுப்பியுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் 7.6 ஏக்கர் பரப்பளவில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு ஒப்பந்தம் கோரப்படும். அதன் பிறகு, ஆறு மாதங்களில் இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கவுண்டம்பாளையத்தில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், கவுண்டம்பாளையத்தில் உள்ள பழைய குப்பை கிடங்கில், 5,334 சோலார் பேனல்கள் அமைக்கப்பட உள்ளது. பழைய குப்பை கிடங்கில் ஏற்கனவே 1 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கு தமிழ்நாடு முதன்மை முதலீட்டுத் திட்டத்தின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் இருந்து நிதி உதவி கோரப்படுகிறது. அதற்கான முதலீட்டுச் செலவில் 10% நிதியுதவி அளிக்கும் என்று அதிகாரி கூறினார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், கோவை உக்கடத்தில் ரூ.17 கோடி செலவில் 3.6 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை மாநகராட்சி நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. இந்த நடவடிக்கை புதுப்பிக்க முடியாத எரிசக்திகளை சார்ந்திருப்பதைக் குறைக்க உதவும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புதிய சூரிய மின் உற்பத்தி நிலையம், மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தில் ரூ.2 கோடியை சேமிக்க உதவும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“