சென்னை: சட்டப்பேரவையில் அதிக கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் ஜி.கே. மணி; என்றுமே மக்கள் நலனில் அக்கறை கொண்ட கட்சி பாமக நிறுவனர் ச.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது: ”தமிழக சட்டப்பேரவையில் அதிக வினாக்களை எழுப்பி முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் ஜி.கே.மணி (8,312 வினாக்கள், இரண்டாமிடம்), இரா. அருள் (5,036, நான்காமிடம்) ச.சிவக்குமார் (2,937, ஐந்தாமிடம்) ஆகிய மூவர் பாமகவினர். அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்!
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒட்டு மொத்தமாக வரப்பெற்ற 27,713 வினாக்களில் பாமகவின் 3 உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்கள் மட்டும் 16,285. மொத்த வினாக்களில் இது 59% ஆகும். கட்சி அடிப்படையில் பார்த்தால் அதிக வினாக்களை எழுப்பிய கட்சி பாமக தான்!
சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் ஜி.கே.மணி தான். அவையில் முழு நேரம் இருந்தவரும் அவர் தான். மக்கள் நலனில் பாமக கொண்டுள்ள அக்கறைக்கு சட்டப்பேரவை செயல்பாடுகளே சாட்சி!” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.