மும்பை: நாட்டில் மிகவும் பிரபலமான பாரம்பரிய இசைக் கலைஞர்களில் ஒருவர் பண்டிட் சிவக்குமார் சர்மா. பத்ம விபூஷண் விருது பெற்ற இவர், 1938-ல் ஜம்முவில் பிறந்தவர் ஆவார்.
ஜம்மு காஷ்மீரின் நாட்டுப்புற இசைக்கருவியான சந்தூரை உலக அளவில் பிரபலம் அடையச் செய்தவர், சந்தூரில் இந்தியப் பாரம்பரிய இசையை வாசித்த முதல் கலைஞர் என்ற பெருமைகளை பெற்றவர் ஆவார். புல்லாங்குழல் இசை மேதை பண்டிட் ஹரி பிரசாத் சவுராசியாவுடன் இணைந்து ஷிவ் – ஹரி என்ற பெயரில் பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
சிவக்குமார் சர்மாவுக்கு கடந்த 6 மாதங்களாக சிறுநீரக் கோளாறு இருந்து வந்தது. இந்நிலையில் மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாரடைப்பால் காலமானார். சிவக்குமார் சர்மாவுக்கு மனைவி மனோரமா, மகன்கள் ராகுல், ரோகித் ஆகியோர் உள்ளார்.
சிவக்குமார் சர்மாவின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள், திரைப்பட உலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.