சென்னை எம்.கே.பி.நகர் 17-வது மேற்கு குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சார்லஸ் ராஜ்குமார். இவரின் மனைவி ரமணி. இவர் கடந்த 21.7.2020-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான புகாரில் எம்.கே.பி நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, ரமணியின் கணவர் சார்லஸ் ராஜ்குமாரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ரமணியின் மீதான சந்தேகத்தால் அவரைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சார்லஸ் ராஜ்குமார் மீது கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை சென்னை அல்லிக்குளம் வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை, சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வழக்கு நடவடிக்கைகளை போலீஸார் தொடர்ச்சியாக கண்காணித்தனர். இந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் எதிரி சார்லஸ் ராஜ்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302-ன் கீழ் ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும், சட்டப் பிரிவு 498-ன் கீழ் மூன்றாண்டுகள் சிறையும், 5,000 ரூபாய் அபராதமும்… சட்டப் பிரிவு 506 (11)-ன் கீழ் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் வழங்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டது. மேலும், இவை அனைத்தையும் ஏக காலத்தில் எதிரி அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த எம்.கே.பி.நகர் போலீஸாரை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.