லிமாசோல்:
சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச தடகள போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். 100மீ தடை தாண்டும் போட்டியில் 13.23 வினாடிகளில் பந்தய இலக்கை கடந்து ஜோதி தங்கம் வென்றார். அத்துடன் அனுராதா பிஸ்வாலின் 20 ஆண்டு கால தேசிய சாதனையையும் முறியடித்தார். 2002ம் ஆண்டு அனுராதா பிஸ்வால் 13.38 வினாடிகளில் இலக்கை கடந்ததே இதுவரை தேசிய சாதனையாக இருந்தது.
ஆந்திராவைச் சேர்ந்த ஜோதி, ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ரிலையன்ஸ் ஃபவுண்டேஷனில் உள்ள பயிற்சி மையத்தில், பயிற்சியாளர் ஜோசப் ஹில்லியரிடம் பயிற்சி பெற்றுவருகிறார்.
கடந்த மாதம் கோழிக்கோட்டில் நடந்த ஃபெடரேஷன் கோப்பை போட்டியின் போது ஜோதி 13.09 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்தார். ஆனால் காற்றின் வேகம் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்ததால் அது தேசிய சாதனையாக கணக்கில் கொள்ளப்படவில்லை.