வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்க தடை விதிக்க மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அகற்றியது குறித்த அறிக்கையை, ஜூலை 12ல் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
‘நோட்டீஸ்’
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் பக்கிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்து 259 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை இடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதையடுத்து, வீடுகளை காலி செய்யுமாறு பொதுப்பணித் துறை சார்பில் ஏப்., 29ல் ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. ஆனால், அப்பகுதி மக்கள் நோட்டீசை வாங்க மறுத்தனர். இதையடுத்து, 8ம் தேதி பொதுப்பணித் துறையினர் பொக்லைன் இயந்திரங்களுடன் சென்று வீடுகளை இடிக்கும் பணியை துவக்கினர்.
அப்போது ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்களில் ஒருவரான கண்ணையன் என்பவர் தீக்குளித்தார்; மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார். இந்நிலையில், ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளோர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் காலின் கான்சால்வஸ், “ஆக்கிரமித்து கட்டியுள்ள வீடுகளை இடிக்கும் போது, ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால், மக்களிடம் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
”ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக தமிழக முதல்வர் கூறினாலும், அந்த இடம் தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது,” என வாதிட்டார்.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது அரசின் கடமை. ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க முடியாது. மாற்று இடம் தருவது தொடர்பாக சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே ராஜா அண்ணா மலைபுரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தடை விதிக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆக்கிரமிப்பை அகற்றியது, அங்கு வசித்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்கியது தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, ஜூலை 12ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Advertisement