புதுடெல்லி: சிறு குழந்தைகளை தாய்மார்கள் ரயிலில் அழைத்துச் செல்லும் போது, மிகுந்த அசவுகரியங்களை சந்திக்கின்றனர். அவர்களின் வசதிக்காக தற்போது ‘பேபி பெர்த்’ எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கீழ் படுக்கையில் (லோயர் பெர்த்) குழந்தைகளை படுக்க வைக்க வசதியாக பேபி பெர்த் அமைக்கப்பட்டுள்ளது. இது 770 மிமீ நீளத்திலும் 255 மிமீ அகலத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. பெர்த்தின் ஓரப்பகுதியில் இரும்பு கம்பி அமைக்கப்பட்டுள்ளதால், கீழ் படுக்கையில் தாய்மார்கள் தங்களின் அருகிலேயே குழந்தையை பத்திரமாக படுக்க வைத்துக் கொள்ள முடியும். பேபி பெர்த் தேவையில்லாத பட்சத்தில் ஸ்டாப்பர் மூலம் அதை மடித்து வைக்கலாம். இந்த வசதி லக்னோ மெயில் ரயிலில் கடந்த மாதம் 27ம் தேதி சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் தாய்மார்களின் கருத்துக்களை கேட்டறிந்து நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளனர்.