பெர்லின்,
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் நிலை பல்வேறு நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக ஜெர்மனியில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பணவிக்கம் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜெர்மனியில் எரிபொருள் விலை 35.3 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே சமயம் உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட 8.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், ஜெர்மனியில் எரிபொருள் விலை உயர்வு ஏற்பட்டு பணவீக்கத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டின் மத்திய புள்ளி விவர அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 1981 ஆம் ஆண்டு ஈரான்-ஈராக் இடையிலான போரின் விளைவாக கணிம எண்ணெய் விலை அதிகரித்த போது, ஜெர்மனியில் இதே மாதிரியான பணவீக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷியா-உக்ரைன் போர் காரணமாக தற்போது ஜெர்மனியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.