மின்துறை சீரமைப்பிற்கான உதய் திட்டம் அமலாக்கப்பட்ட பின்னரும் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் (டான்ஜெட்கோ) நிதிநிலை மேம்படவில்லை என்பது சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.
டான்ஜெட்கோவின் நிதி செயல்பாடுகள் குறித்து சிஏஜி எனப்படும் இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் ஆய்வறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் உதய் திட்டம் அமலுக்கு வரும் முன்பு, அதாவது 2015-ம் ஆண்டில் டான்ஜெட்கோவின் நஷ்டம் 81 ஆயிரத்து 312 கோடி ரூபாயாக இருந்ததாகவும் அத்திட்டம் முடிவுக்கு வந்த 2020-ம் ஆண்டில் நஷ்டம் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்ததாகவும் சிஏஜி அறிக்கை தெரிவித்துள்ளது.
டான்ஜெட்கோவின் கடன்களில் 25 சதவீதத்தை பத்திரங்களாக மாற்றத் தவறியது; அதிக அளவில் கடன்கள் வாங்கியது ஆகியவையே இந்த நஷ்டத்துக்கு காரணம் என்று அந்த அறிக்கை விளக்கியுள்ளது. டான்ஜெட்கோவின் 30 ஆயிரத்து 502 கோடி ரூபாய் கடனை தமிழ்நாடு அரசு ஏற்கும் திட்டமும் எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை என சிஏஜி அறிக்கை தெரிவிக்கிறது. இதனால் கூடுதல் வட்டிச் செலவாக 1,004 கோடி ரூபாய் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. 2018-19-ஆம் நிதியாண்டில் மின்சார விநியோக செலவையும் வருவாயையும் சமமாக்கி லாபமோ நஷ்டமோ இல்லாத பூஜ்ய நிலையை அடைய வேண்டும் என்பதுதான் உதய் திட்டத்தின் இலக்காக இருந்தது. ஆனால் அந்த ஆண்டு 12 ஆயிரத்து 623 கோடி ரூபாய் நஷ்டமே மிஞ்சியதாகவும் தணிக்கைத்துறை அறிக்கை கூறுகிறது.
மின்கட்டணங்களை உயர்த்தாதது, மானிய செலவுகளை மாநில அரசு ஈடு செய்யாதது, அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியது, அனல் மின் நிலையங்களை திறம்பட இயக்காதது உள்ளிட்டவை இதற்கு முக்கிய காரணங்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. வட்டியை குறைப்பதற்காக கடன் சீரமைப்பு செய்வது, மின் கட்டண கொள்கையை உருவாக்குவது உள்ளிட்ட பரிந்துரைகளையும் தமிழக அரசுக்கு சிஏஜி அளித்துள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM