டெல்லி: ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது சர்ச்சையான நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. தற்போது அந்த நோட்டீசுக்கு பதில் அளிக்க ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஜாா்க்கண்ட் மாநில முதல்வராக இருந்து வருகிறார் ஹேமந்த் சோரன். இவரது நிர்வாகத்தின்கீழ்தான் மாநில சுரங்கத் துறை உள்ளது. இவா் தனது பதவியை தவறாக பயன்படுத்தி ராஞ்சியில் உள்ள 0.88 ஏக்கா் பரப்பு கல்குவாரி சுரங்கத்தை தனது பெயரில் குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மாநில பாஜக தலைவரும் முன்னாள் முதல்வர் ரகுபா்தாஸ் குற்றஞ்சாட்டியதுடன், அதுதொடா்பான ஆவணங்களையும் அவா் வெளியிட்டாா். இது பரபரப்பை ஏற்படுத்தி யது.
மேலும், மாநில முதல்வரே சட்டத்தை மீறி செயல்பட்டுள்ளதால், அவரை சட்டப்பேரவை உறுப்பினா் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஆளுநரிடம் மனு கொடுத்திருந்தார். இதுகுறித்து, ஆளுநர் இந்திய தேர்தல் ஆணைய்ததிடம் கருத்து கோரியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தங்களை தகுதிநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று கேள்வி எழுப்பி ஹேமந்த் சோரனுக்கு கடந்த மே 2-ஆம் தேதி தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி மே 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, தனக்கு மேலும் 4 வாரங்கள் அவகாசம் வேண்டும் என ஹேமந்த் சோரன் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து ஹேமந்த் சோரனுக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.