தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் தனியார் கல்லூரி பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 35 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான கல்லூரி பஸ், இன்று மாலை கல்லூரி முடிந்து 35 மாணவர்களை ஏற்றி கொண்டு தாம்பரம் – மதுரவாயல் பைபாசில் எண்ணூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது கல்லூரி பஸ்சின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து டிரைவர் எபினேஷ் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி பார்த்தபோது திடீரென பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதையடுத்து பஸ்சுக்குள் இருந்த மாணவர்கள் பதறியடித்தபடி பஸ்சில் இருந்து இறங்கி வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு அதிகாரி செல்வன் தலைமையிலான குழு அங்கு விரைந்துவந்தது. தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பஸ்சின் தீயை அணைத்தனர்.
உரிய நேரத்தில் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீ விபத்துக்குள்ளான கல்லூரி பஸ்சுக்கு ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கடந்த 5 தினங்களுக்கு முன்பு வாகன புதுப்பிப்பு சான்று பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM