புதுக்கோட்டை பெரியார் நகரில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அலுவலகத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. ஒரு நாள் மட்டும் அ.தி.மு.க-வினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மற்ற அனைத்து நாள்களிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஜனநாயக முறைப்படி நியாயமான முறையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று முடிந்துள்ளது.
தினம், தினம் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் பிரச்னைகளை இந்த அரசு உணர்கிறது. ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் ரம்மியை ஒழிக்க ஏற்கெனவே இருந்த அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், உயர் நீதிமன்றம் அந்தச் சட்டம் செல்லாது என அறிவித்து, புதிய சட்டம் இயற்றலாம் எனக் கூறியிருந்தது. இருந்தபோதிலும் அரசு தாக்கல் செய்த சட்டம் என்பதால் அதில், சட்டத்திருத்தம் செய்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறோம். நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதே தமிழக முதல்வர் உட்பட அரசின் நோக்கமாக இருந்து வருகிறது. விரைவிலேயே ஆன்லைன் ரம்மி ஒழிக்கப்படும்.
ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே முடிவாக இருக்கிறது. இதில் மாறுபட்ட கருத்து எங்களுக்கு இல்லை. இதுகுறித்து, மத்திய அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருவதால், இதில் வேறு கருத்துகளை என்னால் கூற முடியாது.
கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி, பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் அனுப்பியிருக்கிறார். கச்சத்தீவை மீட்க உரிய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து, மேற்கொள்வார். நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார். இனிமேல் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாங்கள் ஆளுநரோடோ… குடியரசுத் தலைவரிடமோ மோதல் போக்கை கடைப்பிடிக்க நினைக்கவில்லை. அவர்கள் காலம் தாழ்த்தினால் அதற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது” என்றார்.