புதுக்கோட்டை அருகே அரிமளம் பகுதியில், புதிதாக மூன்றாவதாக தமிழக அரசு மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக சென்று, மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரிமளம் பகுதியில் ஏற்கனவே இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்கி வரும் நிலையில், மூன்றாவதாக ஒரு டாஸ்மாக் கடையை புதுப்பட்டி பகுதி செல்லும் சாலையில் திறக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஒன்று திரண்டு கடையை முற்றுகையிட்டனர். அப்போது அந்த புதிதாக இருந்த கடை பூட்டப்பட்டு இருந்ததால், ஏற்கனவே அந்த பகுதியில் அமைந்திருந்த 2 டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு உள்ள தடுப்புகளையும் தாக்கினர்.
மேலும் அந்த கடையை இழுத்து மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்திய போதும், அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் மற்றும் பெண்கள் கடையை முற்றுகையிட்டு, பின்னர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து வட்டாட்சியர் கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று கடைகளும் அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து பெண்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டனர்.