தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது என்று பாஜக எம்பி தியா குமாரி தெரிவித்துள்ளார்.
தாஜ்மஹால் கட்டப்பட்ட நிலம் முதலில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்கு சொந்தமானது என்றும், அதை முகலாய பேரரசர் ஷாஜஹான் கையகப்படுத்தியதாகவும், ராஜஸ்தானின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி கூறினார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டத்தின் பாஜக ஊடகப் பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிங், மே 4ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் தாஜ்மஹாலில் சுமார் 20 அறைகள் பூட்டப்பட்டுள்ளன. யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த அறைகளில், இந்து கடவுள்களின் சிலைகள் மற்றும் புனித நூல்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே அந்த 20 அறைகளை திறக்குமாறு இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவிற்கு ஆதரவளித்து பேசிய ராஜஸ்தானின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி, “தாஜ்மஹால் நிலம் ஜெய்ப்பூர் குடும்பத்துக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன, அதை ஷாஜகான் கையகப்படுத்தினார். அந்த காலத்தில் நீதிமன்றம் இல்லாததால், அந்த நேரத்தில் மேல்முறையீடு செய்திருக்க முடியாது. பதிவேடுகளை ஆய்வு செய்த பிறகே விஷயங்கள் தெளிவாகும். அங்கு ஏன் அறைகள் பூட்டப்பட்டுள்ளன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். பல அறைகள் அங்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. கதவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்”என்று கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM