உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ் மஹாலில் பூட்டியிருக்கும் 22 அறைகளை ஆய்வு செய்ய, இந்தியத் தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அண்மையில் பா.ஜ.க நிர்வாகி ஒருவர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுத்தாக்கல் தொடர்பாகப் பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் வாரிசுமான தியா குமாரி, பா.ஜ.க நிர்வாகியின் இந்த முன்னெடுப்பை வரவேற்றிருக்கிறார்.
இது தொடர்பாகப் பேசிய தியா குமாரி, “தாஜ் மஹால் கட்டப்படுவதற்கு முன்பு அந்த இடத்தில் என்ன இருந்தது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். அங்கு என்ன இருந்தது என்பது குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு உரிமையுள்ளது.
மேலும், தாஜ் மஹால் இருக்கும் அந்த நிலம் எங்கள் அரச குடும்பத்துக்குச் சொந்தமானது. ஆனால், அதை ஷாஜஹான் கையகப்படுத்திக்கொண்டார். அந்த நிலத்துக்குப் பதிலாக இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதை என் குடும்பம் ஏற்றுக்கொண்டதா எனத் தெரியவில்லை.
அப்போது நீதிமன்றமும் இல்லை என்பதால் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பில்லாமல் போனது. அது தொடர்பான பதிவேடுகளை தற்போது ஆய்வு செய்துவருகிறோம். அந்த ஆய்வுக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என முடிவெடுப்போம்” எனத் தெரிவித்தார்.
இவர் இதற்கு முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும்போது, “எங்கள் குடும்பம் ராமர் மகனின் வாரிசு. அதற்கான ஆதாரத்தைத் தேவையெனில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்” எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.