திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் சிறப்பு வாய்ந்த திருவிழா, திருச்சூர் பூரம் திருவிழா. திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் நடைபெறும் இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்பதை காண வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்கவில்லை. இந்த ஆண்டு தொடங்கிய பூரம் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நேற்று நடைபெற்ற பூரம் திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட யானைகள் அணிவகுத்து நின்று மக்களை பரவசப்படுத்தியது. இந்த திருவிழாவைக் காண ஜாதி, மதம், வயது வரம்புகளைக் கடந்து, ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
யானைகளின் மேல் ஏற்றப்பட்ட வண்ண மயமான முத்துக்குடைகளை பரிமாற்றம் செய்தது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது.
விழாவில் 100க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் கலந்துகொண்டு பஞ்ச வாத்தியம், பாண்டி மேளம், இலஞ்சித்திரை மேளம் போன்றவற்றை இசைத்தனர். அப்போது மழை பெய்தது. ஆனால் மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் விழாவில் பங்கேற்றனர்.
அதேநேரம் விழாவின் இறுதியில் நடைபெறும் வாணவேடிக்கை நிகழ்ச்சி மழையால் பாதிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில் பலத்த மழை பெய்தது.
இதனால் வாண வேடிக்கை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. மேலும் மழை குறைந்தபின்பு வாண வேடிக்கையை எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.