திருப்பூர்: தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு குருமலை பகுதியில் வன உரிமைச் சட்டப்படி சாலை அமைக்கக்கோரி தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தளி பேரூராட்சி துணைத் தலைவர் கோ.செல்வன், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளர் சந்திர சேகரன் ஆகியோர், அமைச்சரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: “உடுமலைப்பேட்டை வட்டம் மலைப் பகுதியில் தளி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு குருமலைக்கு திருமூர்த்தி மலை தார்ச்சாலை முதல் குருமலை வரை 2006 வன உரிமை சட்டப்படி சாலை அமைக்க 2017ம் ஆண்டு குருமலை வன உரிமை குழுவினால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் தனி வட்டாட்சியரும், வன உரிமைக்குழு கோட்ட அளவிலான தலைவரான உடுமலை கோட்டாட்சியருக்கும் சாலை அமைத்து தர கோரப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மலைவாழ் மக்கள் மருத்துவமனைக்கு உடல்நிலை சரியில்லாதவர்களை கொண்டுவர முடியாமல் 30-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
மருத்துவமனைக்கு கொண்டு வரும்போது, பாதிவழியிலே 10-க்கும் மேற்பட்டோர் கடந்த 2 ஆண்டுகளில் இறந்துள்ளனர். மலைப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் இருந்தும், ஆசிரியர்கள் வந்து போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எங்கள் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்கி, தலைச்சுமையாக கொண்டு வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. எங்கள் சிறு விவசாய பொருட்களை சந்தைப்படுத்த முடியாத நிலை உள்ளது.
மலைப்பகுதியில் இருந்து உடுமலை மருத்துவமனைக்கு வருவதற்கு 110 கி மீ ஆகிறது. குருமலை வனக் குடியிருப்பில் இருந்து, கோவை மாவட்டம் வால்பாறை வட்டம் அப்பர் ஆழியார் அணை வரை 40 கி.மீ. கரடுமுரடான மண் சாலையில் வந்து, மீண்டும் 70 கி.மீ. அப்பர் ஆழியார் அணையில் இருந்து அட்டகட்டி வழியாக பொள்ளாச்சி பாதையில் வந்து உடுமலைப் பேட்டைக்கு சுற்றி வர வேண்டி உள்ளது.
அதே சமயம் நடந்து வந்தால், 6 கிமீ தொலைவில் திருமூர்த்திமலை வருகின்றோம். திருமூர்த்தி மலை தார்ச்சாலை முதல் குருமலை வரை வன உரிமைச்சட்டப்படி சாலை அமைக்க, 2006ம் ஆண்டு வன உரிமை சட்டப்படி, குருமலை, மேல் குருமலை மற்றும் பூச்சுக்கொட்டாம்பாறை வன உரிமை குழு ஆகிய 3 வன குடியிருப்புகளுகும் வன உரிமை சட்டப்படி சமூக உரிமையில் சாலை அமைக்க தலா 1 ஹெக்டேர் நிலம் வழங்கி, திருமூர்த்தி மலை தார்ச்சாலையில் இருந்து குருமலை வரை 6 கிமீ நீளத்துக்கு சாலை அமைத்தால், குருமலை வனக் குடியிருப்பில் 102 குடும்பங்களும், மேல் குருமலையில் 49 மற்றும் பூச்சுக்கொட்டாம்பாறை 46 குடும்பங்கள், குழிப்பட்டி 170 குடும்பங்கள், மாவடப்பு 130 குடும்பங்கள், காட்டுப்பட்டி 65 குடும்பங்கள், கருமுட்டி 65 குடும்பங்கள் என 627 குடும்பங்கள் பயன்பெறும்.
எனவே திருமூர்த்தி தார்ச்சாலை முதல் மலை வாழ் மக்கள் காலங்காலமாக பயன்படுத்தி வரும் நடைபாதையில் கருஞ்சோலை வழியாக சாலை அமைப்பதற்கு, வன உரிமைச்சட்ட வழிகாட்டுதலின்படி வருவாய்த்துறை மூலம் நில அளவை செய்து, சாலை அமைக்க ஆவண செய்ய வேண்டும் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர்கள் முருகன், செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.