தேசதுரோக வழக்கு சில அரசியல் காரணங்களுக்காகவும், பழிவாங்கும் நோக்கத்துடனும் போடப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து, தேசதுரோக வழக்கில் உள்ள சில சட்டப்பிரிவுகளை நீக்கக்கோரி பொதுநல அமைப்புகள் மற்றும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களை அடக்குவதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-ஏ பிரிவை கொண்டு வந்தனர்.
சமீபத்தில் இந்த சட்டத்தில் உள்ள சில சட்டப்பிரிவுகளை நீக்கலாம் அல்லது சில திருத்தங்களை கொண்டு வரலாம் என மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “தேசதுரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யவோ அல்லது விசாரிக்கவோ கூடாது. இந்த வழக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் தற்போதைக்கு தேசதுரோக வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டாம் என கேட்டுகொள்கிறோம். ஏற்கெனவே தேசதுரோக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகலாம்” எனத் தெரிவித்தனர்.