இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 124 (A) இன் கீழ், 152 ஆண்டுகள் பழமையான தேசத்துரோகச் சட்டத்தை
மத்திய அரசு
மறுபரிசீலனை செய்யும் வரை இடைக்காலமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று வரலாற்று சிறப்புமிக்க உத்தரவை
உச்ச நீதிமன்றம்
பிறப்பித்துள்ளது. அதன்படி, தேசத்துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தேசத் துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் 124ஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும், இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, பல்வேறு காலனித்துவ சட்டங்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த போது, தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்வது அல்லது மறு ஆய்வு செய்வது தொடர்பான முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், தற்போது நிலுவையில் இருக்கக்கூடிய தேசத்துரோக வழக்குகளையும் இடைப்பட்ட காலத்தில் பதிவு பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை விரிவாக தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தது. அதன்படி, மேற்கண்ட நீதிபதிகள் அமர்வில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது. அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தேச துரோக வழக்குகளுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறையல்ல என்று மத்திய அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டது.
இதையடுத்து, தேசத்துரோக சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், தேசத்துரோக சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரிக்கவும் கூடாது என உத்தரவிட்டது. “மறு ஆய்வு பணிகள் முடியும் வரை இந்தச் சட்ட விதியைப் பயன்படுத்தாமல் இருப்பதே பொருத்தமானதாக இருக்கும். அதுவரை இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்வதை மத்திய அரசும், மாநில அரசுகளும் தவிர்க்கும் என்று நம்புகிறோம்.” என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
மேலும், நிலுவையில் உள்ள வழக்குகள், மேல்முறையீடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த சட்டப்பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றங்கள் மூலம் ஜாமின் பெற்றுக்கொள்ளவும் அனுமதி அளித்து உச்ச நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது.
புதிதாக ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டால், உரிய நிவாரணம் கோரி நீதிமன்றங்களை அணுகுவதற்கு உரிய தரப்பினருக்கு சுதந்திரம் உள்ளது என்றும், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைக் கருத்தில் கொண்டு கோரப்பட்ட நிவாரணத்தை நீதிமன்றங்கள் ஆராய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.