புதுடெல்லி: ‘தேசத் துரோக சட்டத்தின் கீழ் புதிய வழக்குகளை பதிவு செய்யக் கூடாது,’ என்று ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்திய தண்டனை சட்டம் 124ஏ சட்டப்பிரிவு, தேசத் துரோக வழக்குகளை பதிவு செய்ய வழிவகுக்கிறது. இது அரசுகளால் தவறாகவும், பழிவாங்கும் நடவடிக்கையாகவும் பயன்படுத்தப்படுவதாக கூறி ஏராளமான பொதுநல அமைப்புகள், மூத்த வழக்கறிஞர்கள், அரசியல் கட்சிகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ‘தேசத் துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய உள்ளதால், இந்த வழக்கில் பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும்,’ என ஒன்றிய அரசு கோரிக்கை வைத்தது. அதை பரிசீலித்த நீதிமன்றம், ‘இந்த சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் வரையில் தேசத் துரோக சட்டத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா?’ என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியது. இந்நிலையில், தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தேசத் துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்ய கண்டிப்பாக கால அவகாசம் வேண்டும்,’ என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘அதுவரையில் இந்த சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என ஒன்றிய அரசு உறுதியளிக்க வேண்டும்,’ என தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘தேசத் துரோக சட்டப் பிரிவு 124ஏ-வை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த சட்டத்தை மாற்றி அமைப்பது அல்லது மறுபரிசீலனை செய்வது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவு எடுக்கும் வரையில், இந்த சட்டத்தின் கீழ் ஒன்றிய, மாநில அரசுகள் புதிதாக வழக்குகள் பதிவு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், இதற்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளிலும் விசாரணை நடத்தக் கூடாது. இந்த உத்தரவை ஒன்றிய, மாநில அரசுகள் பின்பற்றும் என நீதிமன்றம் நம்புகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் யார் மீதாவது தேசத் துரோக சட்டத்தின் கீழ் புதிதாக வழக்கு பதிவு செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக நீதிமன்றத்தை நாடலாம்,’ என தெரிவித்தனர்.* உண்மையின் குரலை ஒடுக்க முடியாது -காங்கிரஸ் கருத்துஉச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து காங்கிரஸ் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொது கருத்தை வெளியிடுவோர் மீது அடக்குமுறையை கையாள்வோருக்கு எதிராக தெளிவான செய்தியை இத்தீர்ப்பு வழங்கி உள்ளது. சர்வாதிகாரிகள் மற்றும் அவர்களுடைய கொள்கையை விமர்சிப்பவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. உண்மை வெளிவருவதை ஒருபோதும் தடுக்க முடியாது,’ என்று தெரிவித்துள்ளார்.* எல்லைக்கோட்டை தாண்ட கூடாதுஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘‘அரசையும், நாடாளுமன்றத்தையும் நீதிமன்றம் மதிக்க வேண்டும். நீதிமன்றத்தை அரசும் மதிக்கிறது. இவற்றின் எல்லைகள் நன்கு வரையறுக்கப்பட்டு உள்ளன. எனவே, லட்சுமண ரேகை கோட்டை யாரும் தாண்டக் கூடாது,’’ என்றார்.