தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் 124ஏ சட்டப்பிரிவு விதிகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு அனுமதி அளித்ததும். தேசத் துரோக சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது என்றும், விசாரிக்கவும் கூடாது எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசத் துரோக வழக்கு 124ஏ சட்டப்பிரிவை பயன்படுத்தி, அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தல் செய்வதால் இதனை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
நேற்று இந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பல்வேறு காலனித்துவ சட்டங்களை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசத் துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்வது அல்லது மறு ஆய்வு செய்வது தொடர்பான முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இன்று இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில், “தேச துரோக வழக்குகள் பதிவு செய்வதை நிறுத்த முடியாது. அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி தேசத் துரோக வழக்குகளுக்கு தடை விதிப்பது சரியான அணுகுமுறையல்ல” என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, “தேசத் துரோக சட்டப்பிரிவு 124ஏ விதிகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே சமயத்தில், தேசத் துரோக சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்யும்வரை எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யக்கூடாது, விசாரணை நடத்தவும் கூடாது.
நிலுவையில் உள்ள வழக்குகள், மேல்முறையீடுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பான நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்கப்படுகிறது.
மறு ஆய்வு பணிகள் முடியும் வரை இந்த சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்வதை மத்திய அரசும், மாநில அரசுகளும் தவிர்க்கும் என்று நம்புகிறோம்” என்று தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார்.