டெல்லி: தேச துரோக வழக்கு சட்டப்பிரிவை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்கு பதியக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப்பிரிவை பயன்படுத்தி அரசியல் காரணங்களுடன் தனிநபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் எனவே ஆங்கிலேயர் காலத்தில் இந்திய மக்களை அச்சுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவை 124(A) ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுநல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீது பதில் அளிக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்த நிலையில், ஒன்றிய அரசும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்தது. இதனிடையே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், தேச துரோக வழக்குகளைப் பதிவு செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்வது அல்லது மறுபரிசீலனை செய்வது தொடர்பான முடிவு எடுக்க கூடுதல் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று கொண்ட நீதிபதி, மறுபரிசீலனை செய்யும் வரை தேசத்துரோக வழக்குகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விவரங்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய ஆணையிட்டது. தேசத்துரோக சட்டத்தை மறுபரிசீலனை செய்யும் பணியை 3-4 மாதங்களில் முடிக்கவும் வலியுறுத்தியது. இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வில் விசாரனைக்கு வந்தது. அப்போது, சட்டப்பிரிவை நீக்குவது தொடர்பாக பரிசீலித்து வருவதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, தேச துரோக வழக்குகளை தற்காலிகமாக பதிவு செய்யக்கூடாது என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 124(A) சட்டப்பிரிவு விவகாரத்தில் ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை வழக்குகளை பதிய தடை விதிக்கப்பட்டது. ஒன்றிய, மாநில அரசுகள் இப்போதைக்கு தேச துரோக வழக்குகளை பதிவு செய்ய மாட்டார்கள் என நம்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேசத்துரோக சட்டத்தின் கீழ் ஏற்கனவே பதியப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தேசத்துரோக வழக்குகளில் சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு 162 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த சட்டப்பிரிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.