வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: தேச விரோத சட்டப் பிரிவை மறு பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அதுவரை, இந்த சட்டத்தின் கீழ், புதிதாக வழக்கு பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கும் தடை விதித்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகமான தேச விரோத சட்டப் பிரிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. சமீபத்தில் நடந்த விசாரணையின்போது, ‘இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து, 10ம் தேதி முதல் விசாரணை நடக்கும்’ என, அமர்வு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று முன்தினம் புதிய பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:தேச விரோத குற்றம் தொடர்பான, தொடர்பான, இந்திய தண்டனை சட்டம், 124 ஏ பிரிவை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான குழு மட்டுமே சட்டத்தை மறு ஆய்வு செய்ய முடியும்.அதனால், மறு ஆய்வு செய்யப்படும் வரை உச்ச நீதிமன்றம் பொறுத்திருக்க வேண்டும். இந்த சட்டம், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகுமா என்பது குறித்து விசாரித்து நேரம் செலவிட வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: தேச விரோத சட்டம் குறித்து மறு ஆய்வு செய்ய அனுமதி வழங்குவதுடன், அதுவரை 124 ஏ பிரிவில் புதிதாக வழக்கு பதிவு செய்யக்கூடாது. இந்த சட்டத்தை நிறுத்தி வைக்கிறோம். இந்த பிரிவின் கீழ், மத்திய மாநில அரசுகள் புதிதாக எந்த வழக்கும் பதிவு செய்யக்கூடாது. இந்த பிரிவின் கீழ், புதிதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். அவர்களுக்கு விரைவாக தீர்வு காணப்படும். தற்போது நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணை, மேல்முறையீடு ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Advertisement