நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான தனிக்கை குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்டம் குறித்த தணிக்கை அறிக்கை தொடர்பான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வபெருந்தகை அவர்கள் தலைமையிலான குழுவினர் பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தினை பார்வையிட்டு, உயிரி அகழ்ந்தெடுத்தல் (Bio-Mining) முறையில் குப்பைகளை அகழ்ந்தெடுக்கும் பணியினை ஆய்வு செய்தனர்.
பெருங்குடி குப்பைக் கொட்டும் வளாகத்தினை ஆய்வு செய்த குழுவினர் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து, பெருங்குடி நகர்ப்புற சமுதாய நல மையத்தினை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் டயாலிஸ் முறைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் அடையாற்றின் கரையோரங்களில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரைகளைப் பலப்படுத்தும் பணி, பூங்காப் பணிகள் மற்றும் அங்கு நடப்பட்டுள்ள பாரம்பரிய மரக்கன்றுகள் போன்ற மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை திட்டத்தின் கீழ் சேத்துப்பட்டு கூவம் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டுள்ள நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர், இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை மாவட்டம் குறித்த தணிக்கை அறிக்கை தொடர்பான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்குக் குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் உள்ளாட்சி அமைப்பு குறித்த அறிக்கை மற்றும் பொது மற்றும் சமுக பிரிவு, சென்னை மாவட்டத்தை சார்ந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தொடர்பான தனிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள், சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா, துணை மேயர் திரு.மு.மகேஷ் குமார், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் திரு.கி.சீனிவாசன், சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.