நியூயார்க்: பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனரும், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் உலகம் முழுவதும் கரோனா தொற்றுநோய் பாதிப்பில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக ஏழை நாடுகளுக்கான தடுப்பூசி மற்றும் மருந்துகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறார். குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு மருந்து தயாரிப்பாளரான மெர்க்கின் ஆன்டிவைரல் கோவிட்-19 மாத்திரை வழங்க 120 மில்லியன் டாலர் செலவழிப்பதாக கேட்ஸ் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் பில்கேட்ஸுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பில்கேட்ஸ் கரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதியானது. நான் லேசான அறிகுறிகளே உள்ளது. நான் மீண்டும் நல்ல உடல்நலத்துடன் திரும்பும் வரை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அந்த ஆலோசனைகளை பின்பற்றுகிறேன்.’’