லாகூர்:பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் ஊழல்களை விசாரித்த புலனாய்வு அமைப்பின் முன்னாள் தலைவர், திடீரென மரணம் அடைந்தார்.
பாக்., புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ., தலைவராக இருந்த முகமது ரிஸ்வான், 47, முந்தைய ஆட்சியில், ஷெபாஸ் ஷரீப் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சர்க்கரை ஊழல் குற்றச்சாட்டுகளை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்தார். ஷெபாஸ் ஷரீப் குடும்பத்தினர், 28 போலி நிறுவனங்களை துவக்கி, வெளிநாடுகளுக்கு, 1,400 கோடி ரூபாய் அனுப்பியதையும் கண்டுபிடித்தார்.
சமீபத்தில், பாக்., பிரதமராக ஷெபாஸ் ஷரீப் பதவியேற்ற பின், முகமது ரிஸ்வான் நீண்ட விடுமுறையில் சென்றார். அதன் பின், அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பாக்., புலனாய்வு அமைப்பின் புதிய தலைவராக, அபுபக்கர் குதா பக்ஸ் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், முகமது ரிஸ்வானுக்கு, நேற்று முன்தினம் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவர் இறந்து விட்டதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட தலைவர்கள், முகமது ரிஸ்வான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Advertisement