”பான் இந்தியா படம் நடித்தால் ஹீரோயின் ஆலியா பட் தான்” – சிவகார்த்திகேயன் சிறப்புப் பேட்டி

‘டாக்டர்’ சக்சஸுக்குப் பிறகு வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் ’டான்’ படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எகிறிக் கிடக்கின்றன. பான் இந்தியா, பான் இந்தியா என்று திரையுலகே உச்சரித்துக் கொண்டிருக்கும்போது, கடந்த வாரம் முதல் ‘டான் இந்தியா… டான் இந்தியா’ என்று உச்சரிக்க வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். வரும் மே 13 ஆம் தேதி ’டான்’ வெளியாகவுள்ள நிலையில், புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக மனம் திறந்தார் ‘டான்’ சிவகார்த்திகேயன்.

‘டான்’ குறித்து?

”ஒரு இளைஞனின் லைஃப் ஜர்னிதான் ’டான்’. படத்தில் காலேஜ் பகுதிகள்தான் நிறைய இருக்கும். ஆனால், அதனைத் தாண்டியும் இன்னும் சேர்த்திருக்கிறோம். அனைவரின் வாழ்க்கைப் பக்கங்களையும் டானில் பார்க்கலாம்”.

‘வேலைக்காரன்’ மாதிரி அடர்த்தியான படங்கள் பண்றதைவிட சிவாவை ஜாலியா பார்க்கிறதுதான் மக்களுக்குப் பிடிச்சிருக்குன்னு நினைக்கறீங்களா?

“அப்படி நினைக்கவில்லை. ஆனால், பொழுதுபோக்கு மிக்ஸுடன் எமோஷலான அம்சங்களோடுதான் நம்மிடம் படங்களை எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். முன்பு, ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’, ‘ரெமோ’ போன்ற படங்கள்தான் பிடிக்கும் என்று நினைத்தேன். ஆனால், ’டாக்டர்’ அதனை பிரேக் பண்ணிவிட்டது. ‘கனா’வும் எல்லோருக்கும் பிடித்திருந்தது. ‘எதிர்நீச்சல்’ படத்தின் எமோஷனையும் ரசித்தார்கள். அதனால், பொழுதுபோக்கு அம்சங்களுடன் எமோஷனும் கலந்து இருந்தால் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் ”.

‘டாக்டர்’ ஏற்படுத்துன எதிர்பார்ப்பு ’டான்’ மீதும் இருப்பது கொஞ்சம் பிரஷராக இல்லையா?

“அப்படி எடுத்துக்கவே முடியாது. ‘டாக்டர்’ 100 கோடி வசூல் செய்யும் என்று நினைத்து எடுக்கவில்லை. கொரோனா சூழலில் இப்படியொரு படம் கொடுத்ததால் மக்கள் கொடுத்த கிஃப்டாகத்தான் பார்க்கிறேன். அதேசமயம், ஆசைப்படுவது யோசிப்பது எல்லாமே ’டான்’ மக்களிடம் போய்ச்சேரவேண்டும் என்பதுதான்”.

கதையை மாற்றச் சொன்னீர்கள் என்று இயக்குநர் சிபி கூறியுள்ளாரே?

“நான் கதையை மாற்றவெல்லாம் சொல்லலை. சிபி முதலில் கதையை சொல்லும்போது வேறு சூழல்களில் இருந்ததால் உடனே ஓகே செய்யமுடியவில்லை. எனக்கு பிடிக்கவில்லை என்று நினைத்து ’கதையை மாற்றியுள்ளேன்’ என்றார் சிபி. காலேஜ் படமாக இருந்தப் படத்தை  எல்லா வயதினருக்கும் கனெக்ட் ஆகும்படி கொண்டு வந்திருந்தார். அவரின், உழைப்பு ரொம்பப் பிடிக்கும்”.

image

’டான்’ போஸ்டர்களின் தலைப்பு தமிழில் இல்லை என்ற விமர்சனம் வைக்கப்பட்டதே?

“முதலில் ஆங்கிலத்தில்தான் பதிவு பண்ணோம். ’டான்னு வந்துட்டான்’ன்னு படிச்சிட்டாங்கள்னா என்ன ஆகுறது? அதனால்தான், முதலில் ‘Don’ என்பதைப் மக்கள் மனதில் நினைவில் பதிவு பண்ண நினைத்தோம். இப்போ, டிவி விளம்பரங்களில் தமிழில்தான் தலைப்பு வருகின்றன”.

பான் இந்தியா படத்தில் நடிப்பதாக இருந்தால் யாரை இயக்குநர், இசையமைப்பாளர், ஹீரோயினாக தேர்ந்தெடுப்பீர்கள்?

“’அயலான்’ இயக்குநர் ரவிக்குமார், ஏ.ஆர் ரஹ்மான் சார். ஆலியா பட் இவங்க மூவரைத்தான் செலெக்ட் பண்ணுவேன். ஆனால், ஹீரோ நான் தான். அதேபோல, இந்தக் கூட்டணி கண்டிப்பாக பேண்டஸி படமாகத்தான் கொடுக்க முடியும். ‘அயலான்’ படத்தையும் பான் இந்தியா படமாகத்தான் வெளியிட திட்டமிட்டுள்ளோம்”.

கமல்ஹாசன் தயாரிப்பில் ’எஸ்கே 21’ படத்தில் சாய் பல்லவி இணைந்துள்ளாரே? நடனத்தில் சாய் பல்லவியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

“இந்தப் படத்தில் சாய் பல்லவி இணைந்தது என அனைத்திற்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிதான் காரணம். கமல் சாருருடன் இணைந்து சோனி பிக்சரும் தயாரிக்கிறது. சோனி பிக்சர்ஸின் முதல் படம் இது. நானும் கதையைக் கேட்டவுடன் கண்டிப்பா பண்ணிடனும் என்று முடிவெடுத்தேன். எனக்கு நிறைய சேலஞ்சஸ் இருக்கு. அதில் ஒன்றுதான் சாய் பல்லவியுடன் நடனம் ஆடுவது. கஷ்டம்தான். பார்ப்போம்”.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.