இஸ்லாமாபாத்:
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள போலீஸ் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ராக்கெட் உதவியுடன் கையெறி குண்டுகளை மர்ம மனிதர்கள் வீசி சென்றனர்.
காலிஸ்தான் பயங்கரவாதி கர்விந்தர்சிங் ரிண்டா உத்தரவின் பேரில் காரில் வந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் இந்த செயலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் இறங்கி உள்ளது. இதற்காக புதிய பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் உளவுத்துறை உருவாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த அமைப்பிற்கு லஷ்கர்-இ-கல்சா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பில் சேருவதற்காக இணையதளத்தில் தனி ஐ.டி. உருவாக்கப்பட்டு புதிதாக ஆட்களை சேர்க்கும் முயற்சியில் பாகிஸ்தான் உளவுத்துறை இறங்கி உள்ளது.
இந்த அமைப்பில் ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பிரிவினையை தூண்டும் பயங்கரவாதிகளை ஒன்றிணைத்து தனது புதிய அமைப்பில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பயங்கரவாதிகள் மூலம் இந்தியாவில் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதியில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி அமைதியை சீர்குலைக்க சதி திட்டம் தீட்டி உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து இந்த சதியை முறியடிக்க இந்தியா உஷார் நடவடிக்கை எடுத்து வருகிறது.