இந்தியாவிலேயே முதன்முறையாக சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அமோனைட்ஸ் எனப்படும் கடல்சார் உயிரினங்கள் குறித்த சிறப்பு அருங்காட்சியகம் பெரம்பலூரில் அமைய உள்ளது. இதற்காக, பல நாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்சார் உயிரினங்களின் படிவங்கள், எச்சங்களை பெரம்பலூர் ஆட்சியரிடம் வழங்கினார் ஆராய்ச்சியாளர் நிர்மல்ராஜ்.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் கடல் பகுதிகளாக இருந்துள்ளன. அதற்கான சான்றுகளும் தொல்லுயிர்களின் எச்சங்களும் இன்று வரையிலும் கிடைக்கப்படுகின்றன. காரை, கொளக்காநத்தம், பிளிமிசை, தாமரைக்குளம், பெருயநாகலூர், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட கிராமப்புறங்களில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட தொல்லுயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சர்வதேசப் புவியியல் ஆய்வாளர்கள் இம்மாவட்டத்தை ‘உலக தொல்லுயிர்களின் கோட்டை’ (World Fossils Mount) எனக் குறிப்பிடுகிறார்கள். உலகளவில் 5 சதுர கி.மீ. பரப்பில் பாழ்நிலப்பகுதி என்னும் புவியியல் ஆச்சர்யம் கொளக்காநத்தம் பகுதியில் இருக்கிறது.
இந்தப் பகுதியில் கிடைத்த ‘பிலமனைட் பாசிலை’ இங்கிலாந்து அரசாங்கம் ஸ்டாம்பாக வெளியிட்டு அங்கீகரித்திருக்கிறது. இந்நிலையில் இங்கு கிடைக்கும் எச்சங்களைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கடல்சார் உயிரினங்கள் மற்றும் புதைபடிவங்கள் குறித்த ஆராய்ச்சியாளரும், சார்ஜா மியூசியத்தின் கல்வி நிறுவன இயக்குநரும், புதைபடிவ ஆராய்ச்சியாளருமான நிர்மல்ராஜ் பல்வேறு நாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள், எச்சங்கள் போன்றவற்றை பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக உருவாக உள்ள அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக கலெக்டர் வெங்கட பிரியாவிடம் வழங்கினார்.
இதன் பின்னர் நிர்மல்ராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசினார். ”பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்தமங்கலம் பகுதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்தது. அப்போது வாழ்ந்த கடல் வாழ் உயிரினங்கள் தாவரங்கள் மரங்கள் ஆகியவை காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின.
புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொண்டபோது இதன் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கடல் வாழ் உயிரினமான அமோனைட்ஸ் எனப்படும் நத்தை போன்ற தோற்றமுடைய உயிரினங்களின் படிமங்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகளவு கிடைக்கின்றன. இதற்கென்றே பிரத்யேக அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்தியாவில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு அறிந்த கடல்சார் உயிரினத்திற்கு என்று பிரத்யேக அருங்காட்சியகம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை” என்றார் மலர்ச்சியோடு.