கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கொள்ளை அடிப்பதற்காக 20 பேர் திட்டமிட்டு வந்துள்ளனர்.
இதுகுறித்த ரகசிய தகவல் காவல்துறையினருக்கு கிடைக்கவே, கொள்ளையர்களை பிடிக்க சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அப்போது கொள்ளையர்கள் காவல்துறை மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். இந்த தாக்குதலில் 3 பெட்ரோல் குண்டுகள் மட்டுமே வெடித்த நிலையில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
“கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
தி.மு.க ஆட்சியில் குற்றங்கள் குறைந்திருப்பதாக காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது முதலமைச்சர் பெருமையாக பேசி 24 மணி நேரம் முடிவதற்குள்ளாகவே இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதுதான் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது என்பதற்குச் சாட்சி. காவல்துறையினர் மீதே இப்படி தாக்குதல் நடந்தால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும்?” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில் காவல்துறையினர் மீது கொள்ளையர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 11, 2022